sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
868   கும்பகோணம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 220 - வாரியார் # 879 )  
கறுத்த குஞ்சியும்   முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
     துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
          கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
     பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
          கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
     பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
          தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
     பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
          டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
     டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
          புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
     டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
          புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
     சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
          தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
     பரிச்சு மந்திடு குமர கடம்பத்
          திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.
Easy Version:
கறுத்த குஞ்சியும் வெளிறி
எழும் கொத்து உருத்த வெண் ப(ல்)லும் டைய விழுந்து
உள் கருத்துடன் திகழ்மதியும் மருண்டு
சுருள் நோயால் கலக்கமுண்டு அலம் அலம் உற
வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க
கொழு மேனி அறத் திரங்கி ஒர் தடி கை நடுங்கப் பிடித்து
இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப
சடமாகி அழுக்கு அடைந்து
இடர்ப் படும் உடல் பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல்
ஒழிந்திட்டு
அடுத்திரும் திருவடி தனை என்று உற்றிடுவேனோ
புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு அற
பெரும் கடல் வயிறுகுழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்கத் திறல் வீரா
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று
அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதைக் குறும் தசை குருதிகள் பொங்கப் பொரும் வேலா
சிறுத்த தண்டைய
மதலையொர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி
செருக்கு நெஞ்சு உடை முருக
சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப
திருக்குடந்தையில் உறைதரு கந்தப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கறுத்த குஞ்சியும் வெளிறி ... கருத்த மயிரும் வெளுத்துப் போய்,
எழும் கொத்து உருத்த வெண் ப(ல்)லும் டைய விழுந்து ...
எழுந்து வரிசையாக உருவு கொண்டிருந்த வெண்மை நிறமான பற்களும்
எல்லாம் விழுந்து போய்,
உள் கருத்துடன் திகழ்மதியும் மருண்டு ... உள்ளே
கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து,
சுருள் நோயால் கலக்கமுண்டு அலம் அலம் உற ... உடலைச்
சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ்வாழ்க்கை) போதும்
போதும் என்னும் மன நிலை வர,
வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க ... நீர் வற்றிப் பழுத்த
பழமாய், நிமிர்ந்து ஓங்கி நின்ற முதுகும் வளைவுற,
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க ... கண்டத்தில் வந்து
கோழையும், இருமலும் ஒதுங்கி நிற்க,
கொழு மேனி அறத் திரங்கி ஒர் தடி கை நடுங்கப் பிடித்து ...
கொழுத்திருந்த உடலானது மிகவும் வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக்
கையில் நடுக்கத்துடன் பிடித்துக் கொள்ள,
இடும்பு உறு மனைவியும் நிந்தித்து ... அவமானத்துக்கு
இடமாகும்படி மனைவியும் என்னை இகழ,
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப ... பக்கத்தில் அடுத்துள்ள
பிள்ளைகளும் பழிக்க,
சடமாகி அழுக்கு அடைந்து ... அறிவில்லாத பொருள்போல் ஆகி,
உடலெல்லாம் அழுக்கு சேர,
இடர்ப் படும் உடல் பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல்
ஒழிந்திட்டு
... வேதனை அடையும் உடலுக்கு இடமான சேறு போன்ற
பிறவி என்கின்ற கடலில் அழிந்து போவது ஒழிந்து,
அடுத்திரும் திருவடி தனை என்று உற்றிடுவேனோ ... பெருமை
வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று நான் பொருந்தி
இருப்பேனோ?
புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு அற ... வெளி இடங்கள்
எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும்,
பெரும் கடல் வயிறுகுழம்ப ... பெரும் கடலும் அதன் உட்புறமெல்லாம்
குழம்பவும்,
புகட்டு அரங்கிய விரக துரங்கத் திறல் வீரா ... (அசுரர்கள் மீது)
புகவிட்டு அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள
குதிரையாகிய மயிலேறும் வலிமை வாய்ந்த வீரனே.
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று ... கிரெளஞ்ச மலையின்
பரவி இருந்த வலிமை பிளவுபடும்படியாக வெற்றி அடைந்து,
அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி ... பகைவரைக்
கொன்று அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிபட்டு அழியுமாறு
நெருக்கி,
புதைக் குறும் தசை குருதிகள் பொங்கப் பொரும் வேலா ...
உள்ளடங்கியுள்ள சதைகள், இரத்தம் எல்லாம் மேல் எழும்படியாக
சண்டை செய்யும் வேலனே.
சிறுத்த தண்டைய ... சிறிய தண்டைகளை அணிந்தவனே,
மதலையொர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற ...
பிள்ளைகள் பயப்படும்படி கோபம் மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளி மலையில்
தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி ...
தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின்
மார்பகங்களை விரும்பி, அடைந்து,
செருக்கு நெஞ்சு உடை முருக ... மகிழ்ச்சி கொண்ட மனத்தை
உடைய முருகனே,
சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப ... மயில் என்னும் குதிரை
சுமக்கின்ற குமரனே, கடம்பனே,
திருக்குடந்தையில் உறைதரு கந்தப் பெருமாளே. ...
கும்பகோணத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

Similar songs:

868 - கறுத்த குஞ்சியும் (கும்பகோணம்)

தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

955 - உரைத்த சம்ப்ரம (தனிச்சயம்)

தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

Songs from this sthalam

954 - இலைச்சுருட் கொடு

955 - உரைத்த சம்ப்ரம

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 


1
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thiruppugazh_song.php?sequence_no=868&thalam=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&thiru_name=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&lang=tamil;